Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/05/2011

ஆக்னிஸ்மேரியும் அம்லோர் அம்மாளும் - ஒரு இரத்த சரித்திரம் ( உண்மைச் சம்பவம்)


1940 ஆண்டுகளின் முற்பகுதியில் ரயில்வே தொழிற்சங்க இயக்கம் வலுவான அமைப்பாக வளர்ந்து வந்தது. ரயில்வே தொழிலாளிகள் மிகக் குறைந்த ஊதியத்தில், தினமும் 12 மணி நேரம் வேலை செய்து வந்தனர்.

வார விடுமுறை என்பதே அவர்களுக்கு கிடையாது. மாதச் சம்பளம் 12 ரூபாய் மட்டுமே! பிட்டர் வேலை பார்க்கும் தொழிலாளிக்கு தினக்கூலி 12 அணாக்கள் (75 புதிய காசுகள்); கலாசி வேலை பார்க் கும் தொழிலாளிக்கு 9 அணா 4 பைசா (சுமார் 60 புதிய காசுகள்) தினக்கூலி; எழுத்தர் வேலை செய்பவர்களுக்கு மாதச் சம்பளம் 25 ரூபாய்; வருடத்திற்கு அவர்களுக்கு 1 1/2 ரூபாய் ஊதிய உயர்வு. ஸ்டேஷன் மாஸ்டருக்கு மாதச் சம்பளம் 30 ரூபாய். 


இவற்றின் காரணமாக ரயில்வே தொழிலாளிகள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பு உருவாகி வந்தது. இந்தத் தொழிலாளி களுக்கு தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம் தலைமை தாங்கி போராடி வந்தது. கே. அனந்த நம்பியார். எம். கல்யாணசுந்தரம் ஆகிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்த சங்கத்தின் பிரதான தலைவர்களாக விளங்கினார்கள். இவ்விருவரும் அன்று ரயில்வே யில் எழுத்தர்களாக வேலை செய்து வந்தனர். 1946ம் ஆண்டுவாக்கில் இந்தச் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்தது. இது, தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் எண்ணிக்கையில் சரிபாதியாகும்.

திண்டுக்கல் பகுதியில் ரயில்வே தொழிலாளிகளை சங்கத்தில் இணைப் பதிலும், அவர்களுக்கு அரசியல் உணர்வு ஊட்டுவதிலும்
ஏ.பி. முன்னின்றார். தொழிலாளிகளின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து 1946ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரயில்வே தொழிலாளிகள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்தனர். ஆகஸ்ட் 24ந் தேதி முதல் பொது வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.

ஏகாதிபத்திய - எதிர்ப்பு அலையின் ஒரு பகுதியாக கருதப்படவேண்டிய ரயில்வே தொழிலாளிகளின் வேலை நிறுத்தம், கொடிய தாக்குதலை எதிர் நோக்க வேண்டியிருந்தது. அப்பொழுது
நேருவின் தலைமையிலிருந்த இடைக் கால காங்கிரஸ் அரசாங்கமும், பிரகாசத்தை முதலமைச்சராகக் கொண்ட சென்னை ராஜதானி காங்கிரஸ் அமைச்சரவையும், போராடும் தொழிலாளிகள் மீது கடும் அடக்குமுறையைக் கட்ட விழ்த்து விட்டன. 

செப்டம்பர் 5ம்தேதி ரயில்வே தொழிற்சங்க இயக்கத்தின் ஜீவநாடியான பொன்மலையில் கொடூர மான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஐந்து தொழிலாளிகள் கொல்லப்பட்ட னர். ரயில்வே தொழிலாளிகளின் முக்கியத் தலைவரான கே. அனந்த நம்பியார், போலீசின் கடுமையான தாக்குதலுக்கு இலக்கானார். அவரது எலும்புகள் உடைக் கப்பட்டன. குற்றுயிராகக் கிடந்த நிலையில் அவர் சிறையிலடைக்கப்பட்டார்.

திண்டுக்கல் நகரில், ரயில்வே தொழிலாளிகள், உருக்குப்போன்ற உறுதியுடன் வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.
ஏ.பி. என்று அன்போடு அழைக்கப்படும் ஏ. பாலசுப்பிரமணியம் ஸ்தலத்திலிருந்து அவர்களுக்கு வழிகாட்டி வந்தார். இதை கண்டு கோபமடைந்த காங்கிரஸ் அரசாங்கம் ஏ.பியையும் இதர 10 ஊழியர் களையும் கைது செய்து அப்பொழுது தேரடியில் இருந்த காவல் நிலையத் திற்குக் கொண்டுசென்றது.

ஏ.பி. கைது செய்யப்பட்டார் என்ற செய்தி ஒரு சில நிமிடங்களுக்குள் திண்டுக்கல் நகரம் முழுவதும் பரவியது. இதைக்கேட்டு கொதித்தெழுந்த தோல் பதனிடும் தொழிலாளிகள் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுமாக ஓடோடி வந்து காவல் நிலையத்தைச் சுற்றி நின்று “தலைவர் ஏ.பி.யை விடுதலை செய்” என்று முழக்கமிட்டனர். நகரத்தின் இதர தொழிலாளிகளும் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் 144 தடையுத்தரவை மீறி சாலைகளில் மறியல் செய்தனர். 


திண்டுக்கல் நகரில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர். ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மக்கள், போலீசாருடன் மோதினர். ஸ்தல போலீசாரால் சமாளிக்க முடியாமல், வெளியிலிருந்து ஆயுதப் போலீசார் வரவழைக்கப்பட்டனர். நகர் முழுவதும் முழு கடையடைப்பு நடைபெற்றது. இவற்றைக் கண்ட காவல் துறையினர், ஏ.பி.யை பலத்த பாதுகாப்போடு மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். 

அவர்கள் அத்துடன் நிற்கவில்லை. ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளிகளுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்பதற்காக மதுரை முதலிய இடங்களிலிருந்து ஆயுத போலீசை உடனே கொண்டு வந்தனர். தோல் பதனிடும் தொழிலாளர் கள் வசிக்கும் பகுதிகளில் இந்த போலீசை ஏவி காட்டுமிராண்டித்தனமாக தொழிலாளிகள் மீது தாக்குதல் தொடுத்தனர். பெண்கள் என்றும் குழந்தைகள் என்றும் பாராது ஈவிரக்கமற்ற முறையில் இந்தத்தாக்குதல் நடத்தப் பட்டது.

சவரியார் பாளையம் என்ற இடத்தில் தொழிலாளிகளுக்கும், போலீசுக்கு மிடையே கடும் மோதல் ஏற்பட்டது. குடிசைகளை போலீசார் உடைத்து நொறுக்கினர். அதை எதிர்த்த ஆக்னீஸ் மேரி என்ற பெண் தொழிலாளியை தடி கொண்டு அடித்தனர். அவர் தீரமுடன் போலீஸ் தாக்குதலைச் சந்தித்தார்.

பல மணி நேர தாக்குதலுக்குப் பின் 60க்கும் மேற்பட்ட ஆண் தொழிலாளி களையும் 8 பெண்களையும் போலீஸ் கைது செய்து நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றது. அவர்கள் அனை வருக்கும் நீதிமன்றம் 3 மாத கடுங்காவல் தண்டனை விதித்து மதுரை சிறைச் சாலைக்கு அனுப்பியது. 

தலைவர்கள் அனைவரும் சிறையிலடைக்கப்பட்டு விட்டதால் இந்தத் தொழிலாளிகளை ஜாமீனில் எடுப்பதற்கு வழியில்லாது போய்விட்டது. தண்டனை விதிக்கப்பட்ட ஆக்னீஸ் மேரி, அம்லோர் அம்மாள், அம்மணியம்மாள், மர்லீஸ், புஷ்பம் மாள், ஞானமேரி, அந்தோணியம்மாள் மற்றும் மரியம்மாள் ஆகிய எட்டு பெண்களில் அம்லோர் அம்மாள் தன்னுடைய இரு கைக் குழந்தைகளுடன் சிறையில் இருக்க வேண்டியிருந்தது. போலீஸ் தடியடியில் படுகாயமடைந் திருந்த ஆக்னீஸ் மேரியின் உடல்நிலை சிறையிலடைக்கப்பட்ட சிறிது காலத்திற் குள் மோசமாகியது. சரிவர கவனிப்பின்றி சிறையிலேயே அவர் மரண மடைந்தார்.

சிறைச்சாலையில் தனிக் கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆக்னீஸ் மேரியின் இறந்த உடலை, இதயம் மரத்துப்போன சிறை அதிகாரிகள் கொட்டும் மழையில் திறந்த வெளியில் போட்டு விட்டனர். அவருடன் தண்டனை விதிக்கப்பட்ட பெண்கள் அழுது புரண்டனர்.அதன்பின் அன்னை ஆக்னீஸ் மேரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

உள்ளத்தை உருக்கும் மற்றொரு நிகழ்ச்சியானது அம்லோர் அம்மாவின் இரண்டு கைக் குழந்தைகளும் சரியான போஷாக்கின்றி சிறையிலேயே மடிந்து விட்டன என்பதாகும். அம்லோர் அம்மா வின் வேதனையை விவரிக்க வார்த்தை ஏது?

3 மாத சிறைவாசத்திற்குப்பின் மீத மிருந்த 7 பெண்களும், இதர ஆண்களும் மதுரைச் சிறையிலிருந்து விடுதலை யாகி ரயில் மூலம் திண்டுக்கல் வந்தனர். அவர்களை வரவேற்க தொழிலாளிகள் ரயிலடியில் காத்திருந்தனர். அதில் ஒருவன் அம்மணியம்மாளின் 4 வயது மகன் சிறுவன் ரெங்கர். 

ரயில் நிலையத் திலிருந்து வெளியே வந்த, தன் தாயை ஆவலுடன் ஓடிவந்து அணைத்த ரெங்கர், தாயின் கரங்களிலேயே உயிர் நீத்தான். அம்மணியம்மாள் அழுது புரண்டார். ஊர்வலத்தினர் அனைவரும் கண்ணீர் சிந்தினர். சிறை மீண்டவர்களுக்கான வரவேற்பு ஊர்வலம் தாயன்பிற்காக ஏங்கி நின்ற இளஞ்சிறுவன் ரெங்கரின் சவ ஊர்வலமாக மாறியது.

தோல் பதனிடும் தொழிலாளர் குடும் பங்களைச் சேர்ந்த பெண்களும், ஆண் களும் தாங்க வேண்டியிருந்த வேதனைகளும், செய்த தியாகங்களும் ஏ.பி.யின் மனதை உருக்கின. அந்தப் பாட்டாளி மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப் பணிப்பதுதான் அந்த மக்களுக்குச் செய்யும் நன்றிக் கடன் என்று அவர் உறுதி யாகக் கருதினார். அதுவரை அவ்வப்போது தந்தையுடன் பெயரளவிற்கு நீதி மன்றத்திற்குச் சென்று வந்த ஏ.பி. வழக் கறிஞர் பணியை முற்றிலுமாகத் துறந்து விட்டார். தன்னுடைய வழக்கறிஞர் உடைகளைத் தூக்கியெறிந்துவிட்டார்.

(
ஏ.பாலசுப்பிரமணியம் வாழ்வும் வழியும் நூலிலிருந்து).


26 comments:

 1. எல்லா சூழலிலும் உரிமையை பெற போராட்டங்களையும்,தியாகங்களையும்,அடக்குமுறைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.
  ஆனால் தியாகம் செய்தவர்களை மறந்துவிட்டு அவர்கள் பெற்றுத்தந்தவற்றை மட்டும் அனுபவிப்பது மன்னிக்க முடியாதது.
  தியாகங்களை நினைவூட்டும் பதிவு.நன்றி சகோ.

  ReplyDelete
 2. எவ்வளவு கொடுமை ஆனால்...
  இன்று...!
  தங்கம் செய்யாததை
  சங்கம் செய்யும் என்பதே
  உண்மை!
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 3. உள்ளத்தை உருக்கும் பதிவு.

  ReplyDelete
 4. அருமையான பதிவு நிறைய விசயங்கள் அறிந்து கொண்டேன்...

  ReplyDelete
 5. பல விஷயங்கள் உரைத்தது நண்பா நன்றி!

  ReplyDelete
 6. அன்பின் கருன் - சும்மா கிடைக்க வில்லை சுதந்திரம் - அன்றிலிருந்து இன்று வரை வேலை நிறுத்தங்களை அடக்கு முறையினாலேயே அரசுகள் சந்தித்திருக்கின்றனர். என்ன செய்வது ......... பக்ர்வினிற்கு நன்றி கருன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 7. எனக்கு இது புதிய தகவல் நன்றி பாஸ் .

  ReplyDelete
 8. மாப்பிள சில இடங்களில்  இவர்கள் ஏன்தான் போராடுகிரார்களோன்னு தோனும்..!!?

  ReplyDelete
 9. புத்தகம் எங்கே கிடைக்கிறது?

  ReplyDelete
 10. அருமையான பகிர்வு கருன்..

  புத்தகம், பதிப்பகம், விலை பற்றிய விவரங்களை பதிவின் கீழே சொல்லுங்கள்.

  ReplyDelete
 11. உருக்கமான வரலாற்றுப் பதிவு.

  ReplyDelete
 12. குட் பதிவு,
  தெரியாத விடயங்கள் நிரம்ப தெரிந்து கொண்டேன்
  தேங்க்ஸ் பாஸ்

  ReplyDelete
 13. எவ்வளவு கொடுமை, உள்ளத்தை
  உருக்கும் பதிவு. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

  ReplyDelete
 14. புதிய விஷயங்களின் தொகுப்பு. நன்றி.

  ReplyDelete
 15. ஏ.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு எம் வந்தனங்கள்.

  ReplyDelete
 16. ஒரு ஆசிரியர் நினைவுகூற வேண்டிய சிறப்பான செய்தியை பதிவு செய்துள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
 17. பகிர்வுக்கு நன்றி சார்

  போராட்டம்ன்னு இறங்கும் போது எல்லாத்தையும் தாங்கிக்க பழகணும்...

  இது எல்லா போராட்டத்திலயும் இருக்கும்..

  ReplyDelete
 18. சிறப்பான பகிர்வு.நன்றி.

  ReplyDelete
 19. அரிய பல தகவல்கள், அருமையா சொல்லிருக்கீங்க.

  ReplyDelete
 20. திண்டுக்கல் ஏ.பி.யை மறக்க முடியுமா? அவருடன் புதிதாக ஆக்னிஸ் மேரி பற்றியும் தெரிந்து கொண்டேன்!நன்றி!

  ReplyDelete
 21. மனதை கீறும் வரலாற்று பகிர்வு

  ReplyDelete
 22. சிறந்த பதிவு.. பாராட்டுக்கள் பல...

  ReplyDelete
 23. நல்லதொரு பதிவு அருன்.இப்போதுதான் வாசிக்க நேரம் கிடைச்சிருக்கு !

  ReplyDelete
 24. நெஞ்சை உருக்குகிறது . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"