Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/15/2013

நடிக இயக்குனர் மணிவண்ணன் - நினைவலைகள்.தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்க்கு வயது 59.

திடீர் மாரடைப்பு காரணமாக அவருக்கு மரணம் ஏற்பட்டுள்ளது. அவரது இல்லம் நெசப்பாக்கத்தில் உள்ளது.

அங்குதான் அவரது உடல் உள்ளது. கடைசியாக நாகராஜ சோழன் எம்.எல்.ஏ படத்தை இயக்கினார்.

50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணன் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழீழ விடுதலைக்காக உரத்த அளவில் குரல் கொடுத்தவர் அவர்.

இவரது திடீர் மரணத்தினால் திரையுலகம் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளது.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தான் இறந்த பின்பு தனது உடலுக்கு புலிக்கொடியை போர்த்தவேண்டும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் 1979-ம் ஆண்டு பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து இயக்குனர் ஆனார். இவரது முதல் படம் கோபுரங்கள் சாய்வதில்லை. நூறாவது நாள், ஜல்லிக்கட்டு உள்ளபட 50 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அமைதிப்படை மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ்திரையுலகின் முக்கிய இயக்குனர் என்ற அந்தஸ்து இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

50 படங்களுக்கு இயக்குனர், 400 படங்களில் நடிகர், பல படங்களுக்கு வசனகர்த்தா என பல்வேறு முகங்களுடன் திரையுலகில் 35 வருடங்களுக்கு மேல் ரசிகர்களின் ஆதரவுடன் இருந்தவர் மணிவண்ணன்.

இயக்குனர் என்ற ரீதியில் குறிப்பிட்ட வகையான படங்களை மட்டும் எடுத்து தனக்கென வரையறை வரைந்துக்கொள்ளாமல் காதல், காமெடி, ஆக்‌ஷன், த்ரில்லர் என பலவகைப் படங்களையும் எடுத்து சிறந்த இயக்குனராக விளங்கியவர் மணிவண்ணன். 

பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மீது ஏற்பட்ட பாதிப்பின் காரணமா நூறு பக்கங்களுக்கு மேல் திறந்த மடல் எழுதி, பாரதிராஜாவின் இதயத்தில் இடம்பிடித்து அவரது உதவி இயக்குனராகவும் இடம்பிடித்த மணிவண்ணன் திரையுலகில் படைத்த சாதனைகளை பல பக்கங்களுக்கு மேல் எழுதலாம்.


தனது கடுமையான உழைப்பால் பாரதிராஜாவின் உதவி இயக்குனர்களில் சிறந்தவராக விளங்கி உதவி இயக்குனராக இருந்த போதே பாரதிராஜாவின் நிழல்கள் திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாகவும், கொடி பறக்குது திரைப்படத்தில் ரஜினிக்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்தார்.

உதவி இயக்குனராக தனது பணியை செவ்வனே செய்துமுடித்து இயக்குனராக உருமாறி கோபுரங்கள் சாய்வதில்லை, முதல் வசந்தம், 24-மணி நேரம், நூறாவது நாள், சின்னதம்பி பெரிய தம்பி, வீரப்பதக்கம், பாலைவன ரோஜாக்கள், அமைதிப்படை என பல்வேறு கதையம்சம் கொண்ட திரைப்படங்களை எடுத்து வெற்றிகண்டார் மணிவண்ணன்.

”எந்த படமா இருந்தாலும் கதை, வசனம் பேப்பர்ல எழுதி வெச்சிக்க மாட்டாரு. ஷூட்டிங் ஸ்பாட் வந்ததும் அவர் மனசுல என்ன தோணுதோ அதுதான் கதையும் வசனமும். அவரோட இந்த திறமையை பார்த்து பல சமயத்துல உறைஞ்சு போய் நின்னுருக்கோம்” என்று அவரது உதவி இயக்குனர்கள் மணிவண்ணனின் திறமை பற்றி கூறியுள்ளனர். இயக்குனராக மட்டுமல்லாமல் முண்ணனி இயக்குனர்களின் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து ஒரு நடிகராகவும் திரையுலகில் தனது முத்திரையை பதித்திருக்கிறார். 

1994-ல் மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று மணிவண்ணனுக்கு பெரும் புகழை தேடிக்கொடுத்தது. 2001-ல் ஆண்டான் அடிமை திரைப்படத்தை இயக்கிய பிறகு உடல்நலக் குறைவால் திரையுலகத்திலிருந்து ஒதுங்கி இருந்த மணிவண்ணன் ’வயதானாலும் என் கலை ஆர்வத்திற்கும், நையாண்டிக்கும் வயதாகவில்லை’ என்று கூறும் விதத்தில், அமைதிபடை -2(நாகராஜ சோழன் M.A.M.L.A) திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றிபெற்றார்.

மணிவண்ணனுக்கு மனைவியும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.


5 comments:

 1. நினைவலைகளின் தொகுப்பு அருமை..

  தமிழ் சினிமா ஒரு உன்னத தமிழனை இழந்து விட்டது...

  அன்னாரின் ஆன்மா சாந்தியடை வேண்டுகிறேன்...

  ReplyDelete
 2. நல்ல படைப்பாளி.... அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

  ReplyDelete
 3. அவரது இனி ஒரு சுதநதிரம் - ஒரு முக்கியமான திரைப்படம்

  ReplyDelete
 4. நல்ல ஒரு இயக்குனரை, நடிகரை தமிழகம் இழந்து விட்டது...

  அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

  ReplyDelete
 5. ஆழ்ந்த இரங்கல்கள்

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"