Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/03/2014

மங்கல்யான் - சில சுவாரஸ்ய தகவல்கள் - மற்றும் இஸ்ரோவின் அடுத்த பாய்ச்சல்


காலையில நம்ம நாடோடி எக்ஸ்பிரஸ் சீனு மங்கல்யான் பற்றி சில சுவார்யசியமான செய்திகள் விகடனில் வந்திருப்பதாக தகவல் சொல்லியிருந்தார். அந்த கட்டுரை உங்களுக்காக..
1969 -ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி. அபோல்லோ-11 விண்கலத்தில் இருந்து இறங்கி
, ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் மனிதனின் முதல் அடியை எடுத்துவைத்தபோது சொன்ன வார்த்தைகள்... 'மனிதனுக்கு இது ஓர் அடிதான்... மனிதகுலத்துக்கோ மாபெரும் பாய்ச்சல்!’ அந்தத் தினம் அமெரிக்காவுக்குச் சொந்தம். அப்படி ஒரு தினத்தை (செப்டம்பர் 24, 2014) இந்தியர்களுக்காக, தனது 'செவ்வாய் பாய்ச்சலின்’ மூலம் பரிசாக அளித்திருக்கிறது மங்கள்யான்!
ஊருக்கு கொரியர் அனுப்புவதைப்போல செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அவ்வளவு சுலபமாக அனுப்பிவிட முடியாது. காரணம், பூமிக்கும் செவ்வாய்க் கிரகத்துக்கும் இடையிலான தூரம். இரண்டும் வெவ்வேறு வட்டப் பாதையில் சுற்றுபவை. செவ்வாய் ஒரு கிரிக்கெட் மைதானத்தின் பவுண்டரி லைன் அளவுக்கு சூரியனைச் சுற்றிவரும் என்றால், பூமி பேட்டிங் பிட்ச்சைச் சுற்றியுள்ள உள்வட்டம் அளவுக்குச் சுற்றிவரும் என எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். நீள்வட்டப் பாதையில், வெவ்வெறு வேகத்தில், வெவ்வேறு தூரத்தில் சுற்றும் இரண்டு கிரகங்களுக்கும் இடையில் தூரம் வேறுபட்டுக்கொண்டே இருக்கும். அதைக் கணித்து மிகச் சரியாக செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்துவது என்பது, டி-20 போட்டியின் கடைசி ஓவரில் ஆறு பந்துகளுக்கு 36 ரன்கள் இலக்கை விளாசுவதற்குச் சமம்!
பூமியும் செவ்வாயும் மிக அருகில் இருக்கும்போது, மங்கள்யானை செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் இறக்குவதுதான் பாதுகாப்பு. செலவும் கம்மியாக இருக்கும். ஆனால், துப்பாக்கியால் சுட்டு, ஓர் இலக்கைத் தாக்குவதைப்போல ஒரு செயற்கைக்கோளை உடனடியாக அனுப்பிவிட முடியாது. முதலில் செயற்கைக்கோளை பூமியைக் கொஞ்ச காலம் சுற்றவைப்பார்கள். படிப்படியாக உயரத்தை அதிகரித்து, ஒரு கட்டத்தில் பூமியின் ஈர்ப்புவிசையைவிட்டு வெளியேற்றி, நெடுந்தொலைவு பயணித்து, செவ்வாய்க் கிரகத்தின் ஈர்ப்புவிசையைச் சமாளித்து அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துவார்கள். ஏற்கெனவே அதிவேகத்தில் பயணிக்கும் செயற்கைக்கோளை, செவ்வாய்க் கிரகத்தின் ஈர்ப்பு விசை இன்னும் அதிகம் ஈர்க்கும். அப்போது செயற்கைக்கோளின் எதிர்திசையில் இன்ஜினை இயக்கி, ஈர்ப்பின் வேகத்தைக் குறைத்து சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்த வேண்டும். கிட்டத்தட்ட 22 கோடி கி.மீ தூரத்தில் இருக்கும் ஒரு செயற்கைக்கோளுக்கு, பூமியில் இருந்து பிறப்பிக்கப்படும் ஆணை சென்றுசேர, 12 நிமிடங்கள் ஆகும். 'இன்ஜினை இயக்கு’ என இங்கிருந்து கமென்ட் கொடுத்தால், 12 நிமிடங்கள் கழித்து கமென்ட் கிடைத்த பிறகே, அங்கு இன்ஜின் இயக்கப்படும். ஒருவேளை தப்பான கமென்ட் கொடுத்து, அடுத்த விநாடியே அதைச் சரிசெய்ய முயற்சி செய்தாலும் 24 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். அதற்குள் அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். செயற்கைக்கோள் செவ்வாயில் மோதிவிடலாம்; அல்லது விண்வெளியில் திசைமாறி சென்றுவிடலாம். இதைச் சமாளிப்பதுதான் சவால்!
1964-ம் ஆண்டு அமெரிக்கா அனுப்பிய மரைனர்-4தான் செவ்வாய் பயணத்துக்கான முதல் படி. அதிலிருந்து ரஷ்யா, ஐரோப்பிய தேசங்கள், சீனா, ஜப்பான் என அத்தனையும் செவ்வாயைத் தொட முயற்சிசெய்து சூடுபட்டுக்கொண்டார்கள். அமெரிக்கா 51 முறை செவ்வாயில் செயற்கைக்கோளைச் சுற்றவைக்க முயற்சி செய்திருந்தாலும் 21 முறைதான் சக்சஸ் அடித்தார்கள். 'விண்வெளி தாதா’ நாசாவே பலமுறை அடிவாங்கிதான், செவ்வாய்க்கான சக்சஸ் ஃபார்முலா  கண்டுபிடித்தார்கள். அதன் பிறகே செவ்வாயில் ரோபோவை இறக்கும் புராஜெக்ட்டுக்குத் துணிந்தார்கள். இந்த நிலையில்தான் மங்கள்யானை செவ்வாய்க்கு அனுப்பியது இந்தியா. 'ஒரு சுமார் பேக்கேஜ்’ கொண்ட, வெறும் 15 கிலோ எடை கொண்ட மங்கள்யானை, செவ்வாய்க்கு ஏவி இந்தியா என்ன செய்யப்போகிறது?’ - இதுதான் உலக நாடுகளின் எதிர்பார்ப்புக்கும் அவநம்பிக்கைக்கும் காரணம்.
2013-ம் ஆண்டு நவம்பரில் மங்கள்யான் கிளம்பியதுமே 'மாவென்’ என்ற செயற்கைக்கோளை நாசா செவ்வாய்க்கு அனுப்பியது. உடனே ஒப்பீடு கிளம்புமே! மாவெனின் மொத்த பட்ஜெட் 672 மில்லியன் டாலர்; அதாவது தோராயமாக 4,130 கோடி ரூபாய். இந்தியாவின் மங்கள்யான் பட்ஜெட் 454 கோடி ரூபாய்.
இதற்கு முன்பு அமெரிக்கா அனுப்பிய அனைத்து செயற்கைக்கோள்களும், ஆராய்ச்சி ரோபோக்களும் செவ்வாயில் உயிரினம் ஜீவிப்பதற்கான மீத்தேன் இல்லை எனச் சொல்லிவிட்டன. செவ்வாயில் இப்போது சுற்றிக்கொண்டிருக்கும் கியூரியாசிட்டிகூட 'நஹி ராஜூபாய்’ எனச் சொல்லிவிட்டது. 'அந்தப் பக்கம் போகாதே... அது முட்டுச்சந்து’ எனச்  சொல்லிவிட்ட பிறகும், எதற்கு மங்கள்யான்? மனிதனை இறக்கி ஆராய்ச்சிசெய்த பின்னும்கூட 'சந்திரனில் நீர் மூலக்கூறு இல்லை’ என நாசா கூறி வந்தது. 2008-ல் இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-1, 'நிலவில் முன்பு நீர் இருந்தது. ஆறுகள் ஓடியிருக்கின்றன’ எனக் கண்டுபிடித்துக் கூற, அத்தனை நாடுகளுக்கும் ஆனந்த அதிர்ச்சி. நாசா மீண்டும் நிலவை ஆராய்ந்து, 'ஆமாம்’ என இந்தியாவின் கண்டுபிடிப்பை ஒப்புக்கொண்டது. இப்போது நிலவில் நீர் மூலக்கூறுகளைக் கண்டறியும் ஆராய்ச்சிகள் தொடங்கியிருக்கின்றன. ஆக, விண்வெளியைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆராய்ச்சியும் அனுமானங்களே தவிர, இதுதான் முடிவான முடிவு எனச் சொல்லிவிட முடியாது!
இப்படி ஒரு நிலையில்தான் மங்கள்யான் புராஜெக்ட்டைக் கையில் எடுத்தது இஸ்ரோ.
இந்தியாவுக்குப் பின் அமெரிக்கா அனுப்பிய மாவென், செவ்வாயை நோக்கிப் போய்க்கொண்டிருக்க, மங்கள்யானோ பூமியைச் சுற்றிக்கொண்டிருந்தது. ஏனெனில், 15 கிலோ எடையை வைத்துக்கொண்டு பூமியின் புவியீர்ப்பு விசையை, மங்கள்யானால் தாண்ட முடியவில்லை. வெறும் கையால் கல் எறிவதைவிட, அதை ஒரு துணியில் கட்டி விறுவிறுவெனச் சுற்றிவிட்டால் அதிவேகமாகப் போகுமே! அந்த உத்தியைக் கையில் எடுத்தார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். பூமியைச் சுற்றும் மங்கள்யானின் உயரத்தையும் வேகத்தையும் அதிகரித்துக்கொண்டே சென்று படாரென ஒரு புள்ளியில் வெளியேற்ற, அது பூமியின் புவியீர்ப்பு விசையில் இருந்து விடுபட்டது.
ப்போது அடுத்த சவால். முந்தைய நாள் மழையில் நனைந்த பைக்கையே ஒரே உதையில் உயிர்ப்பிக்க முடியாது அல்லவா? 11 மாதங்கள் எந்த இயக்கமும் இல்லாமல் இருந்த, அதுவும் பல கோடி கி.மீ தள்ளியிருக்கும் மங்கள்யானை இஸ்ரோவில் இருந்து உயிர்ப்பிக்க வேண்டும். எப்படி? அதுதான் அந்தச் சவால். (இஸ்ரோவில் அதை 'கும்பகர்ணன் ஸ்லீப்’ என ஜாலியாகக் குறிப்பிடுகிறார்கள்). விண்வெளியில் இன்ஜின் ஜாம் ஆகியிருக்கலாம்;  துருப்பிடித்திருக்கலாம். இன்ஜின் இயங்காவிட்டால் 'திரஸ்டர்கள்’ என்ற மாற்று இன்ஜின் ஒன்று இருக்கும். அதுவும்கூட உறைந்துபோயிருக்கலாம். மேலே சொன்ன 12 நிமிட இடைவெளி சவாலில், இங்கிருந்து இன்ஜினை இயக்கி அதன் வேகத்தைக் குறைக்க வேண்டும். எத்தனை பெரிய சவால்? கூடுதலாக இன்னொரு சிக்கலும் உண்டு.
மங்கள்யான் செவ்வாய்க்குப் போய்ச் சேரும் நேரத்தில் பூமிக்கும் மங்கள்யானுக்கும் இடையே செவ்வாய் கிரகம் இருக்கும். அதாவது செவ்வாயின் பின்வாசல் வழியாக மங்கள்யானைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். 'அப்படி ஒரு நிலைமை வந்தால்’ என முன்கூட்டியே கணித்த இஸ்ரோ விஞ்ஞானிகள், மினி கணினி ஒன்றை மங்கள்யானில் பொருத்தியிருந்தார்கள். அதன்படி நாம் சொல்கிற நாளில், மணியில், நிமிடத்தில், விநாடியில் அது தானே உயிர்பெற்று இன்ஜினை இயக்கிக்கொள்ளும். செப்டம்பர் 24-ம் தேதி அதிகாலை இஸ்ரோ விஞ்ஞானிகளின் திட்டப்படி மங்கள்யான் செயல்படத் தொடங்க, 'செவ்வாய் ஆய்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி கண்ட நாடு’ என்ற பெருமிதத்தோடு வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது இந்தியா. மங்கள்யான் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறதா என்பதைக் கண்காணித்துக் கூறியதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் உதவின என்றாலும், இது 100 சதவிகிதம் பெருமைப்படத்தக்க இந்திய சாதனை.
இத்தனை கஷ்டப்பட்டு அனுப்பிய மங்கள்யானின் பயன்பாடு ஆறு மாதங்கள் மட்டுமே. அது ஏன்? இஸ்ரோ அறிவியல் மற்றும் தொலையுணர்வு செயற்கைக்கோள் தலைமைத் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையிடம் கேட்டேன்.
''அந்தக் காலகட்டத்திலேயே மங்கள்யான் 17 அல்லது 18 தடவை செவ்வாயைச் சுற்றிவந்து  நமக்குத் தேவையான தகவல்களைக் கொடுத்துவிடும். அப்புறம் செவ்வாயின் நிலப் பரப்பில், வளிமண்டலத்தில் பெரிய மாறுதல்கள் இருக்காது. பழைய ரிசல்ட்தான் கிடைக்கும்.
அதே சமயம் ஆறு மாதங்களுக்கு அப்புறமும் மங்கள்யான் செவ்வாயைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கும். நாம்தான் அதனிடம் இருந்து தகவல் வாங்குவதை நிறுத்திவிடுவோம். மங்கள்யான், ஒரு பெரிய அனுபவம். அடுத்ததாக, 'சந்திராயன்-2’, 'ஆதித்யா’ என இரண்டு பெரிய புராஜெக்ட்களில் இருக்கிறோம். சந்திரனில் ஒரு ரோபோவை இறக்கி, ஆய்வுசெய்வது சந்திராயன்-2; சூரியனை ஆய்வுசெய்வது 'ஆதித்யா’. சூரியனையே சுற்றுவதுபோல செயற்கைக்கோள் அனுப்புவது மிகப் பெரிய விஷயம். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இரண்டு ஈர்ப்பு விசையும் பேலன்ஸ் ஆகும்
ஓர் இடத்தில், ஒரு செயற்கைக்கோளை நிலைநிறுத்தும் புராஜெக்ட்தான் ஆதித்யா. அதில் இரண்டு கேமராக்கள் இருக்கும். ஒன்று, சூரியனைப் பார்த்திருக்கும். இன்னொன்று, பூமியைப் பார்த்திருக்கும். அது வெற்றியடைந்தால்,  சூரியனைப் பற்றி நாம் இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ளலாம்!'' என்கிறார் உற்சாகக் குரலில். - கட்டுரை  எஸ்.கலீல்ராஜா, ஞா.சுதாகர்.
நமக்கும் அந்த உற்சாகம் பற்றிக்கொள்கிறது..

7 comments:

 1. செவ்வாய்க்கு செயற்கைக் கொள் அனுப்பியதில் வெற்றிபெற்ற நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். பயனுள்ள தகவல்கள் நல்ல பகிர்வு

  ReplyDelete
 2. நல்ல கட்டுரை...
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. அருமையான தகவல்களை தந்த கட்டுரை படிக்க வாய்ப்பு தந்ததற்க்கு நன்றி !
  த ம 3

  ReplyDelete
 4. Hi,

  Good Information Raju Bhai :)

  Regards,
  A Yusuf

  ReplyDelete
 5. very well written. enjoyed reading

  ReplyDelete
 6. அன்புள்ள அய்யா
  வணக்கம். மங்கல்யான் - சில சுவாரஸ்ய தகவல்கள் - மற்றும் இஸ்ரோவின் அடுத்த பாய்ச்சல் பற்றி பல அரிய தகவல்களை அருமையாக தந்தீர்கள். பாராட்டுகள்.

  எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து எனது படைப்புகளைப் பார்துப் கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
  நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  ReplyDelete
 7. நல்லதொரு பகிர்வு! நன்றி!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"