நேபாளத்தில் எருமை மேய்த்தவர் இந்தியாவுக்கு தங்கம் வென்ற கதை... - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

4/09/2018

நேபாளத்தில் எருமை மேய்த்தவர் இந்தியாவுக்கு தங்கம் வென்ற கதை...
இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் மன்னராக பரவலாக அறியப்படும் ஜித்து ராய் சர்வதேச அளவில் பல வெற்றிகள் பெற்றுள்ளார்.

இன்று சர்வதேச போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் பல வெற்றிகளை குவிக்கும் ஜித்து ராய் ஒரு காலத்தில் நேபாளத்தின் ஒரு மலை கிராமத்தில் கால்நடைகளை மேய்த்துக்கொண்டும் வயல்வெளியில் வேலை செய்துகொண்டும் இருந்தவர்.

அப்போது அவருக்கு துப்பாக்கி சுடுதல் பற்றி எதுவும் தெரியாது. அவருக்கு தெரிந்ததெல்லாம் அவரது எருமை மாடுகளும், வயல் வெளிகளும்தான்.

நேபாளின் சாகுவாசபா பகுதியில் பிறந்த அவர் தனது 20ஆம் வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ஜித்துவின் தந்தையும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். இந்தியவுக்காக சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் சண்டையிட்டுள்ளார்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றினாலும் பிரிட்டன் ராணுவத்தில் சேர்வதே ஜித்துவின் கனவாக இருந்தது. பிரிட்டனில் கோர்கா படைப்பிரிவு 200 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.

2006-2007ஆம் ஆண்டு காலகட்டத்தில், நேபாளத்தில் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் ஒன்று நடப்பதாக ஜித்து கேள்விப்பட்டார். ஆனால், முகாம் நடந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது அங்கு நடந்துகொண்டிருந்தது இந்திய ராணுவத்தின் கோர்கா படைப்பிரிவுக்கு ஆளெடுக்கும் முகாம். எனவே, இந்திய ராணுவப் பணிக்கு அவர் விண்ணப்பித்தார். அவருக்குப் பணியும் கிடைத்தது. அது அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருந்தது.

துப்பாக்கி சுடுதலில் அவருக்கு பெரும் ஆர்வம் இல்லாவிட்டாலும், அவரது திறமையைக் கண்ட அவரது மூத்த அதிகாரி ஒருவர், அவரை லக்னோவில் இருந்து மோ என்ற இடத்தில் உள்ள துப்பாக்கிப் பயிற்சி மையத்துக்கு அனுப்பி வைத்தார்.

ராணுவ துப்பாக்கி சுடுதல் அணிக்கு அவர் தேர்ச்சி அடையாததால், இரு முறை திருப்பி அனுப்பப்பட்டார். எனினும் தொடர் முயற்சிகளால் அவர் 2013 முதல் இந்தியாவுக்காக பல சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். அப்போது முதல் அவர் பெரும்பாலான போட்டிகளில் தங்கம் வென்று வருகிறார்.

பதினொன்றாம் கோர்கா படைப்பிரிவில் பணியாற்றும் ஜித்து ராய் 2014-ல் கிளாஸ்க்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

அதே ஆண்டு நடந்த உலகக் கோப்பையிலும் ஒன்பது நாட்களுக்குள் மூன்று தங்கங்களை வென்றார்.

ரியோவில் 2016இல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அவர் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பதக்கங்கள் எதுவும் வெல்லவில்லை.

அதே ஆண்டு மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இவர் வெண்கலம் வென்றார்.

அப்போது வரை அவர் இந்தியாவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒரு நட்சத்திரமாக இருப்பது அவரது குடும்பத்தினருக்கு தெரியாது. அவர் அர்ஜுனா விருது பெற்றபோது, அவரது தாய் டெல்லி வந்திருந்தார். அப்போதுதான் தன் மகன் ஒரு சர்வதேச விளையாட்டு வீரன் என்பது அவருக்குத் தெரிந்தது.

ரயில் மற்றும் சாலை மார்க்கமாக அவர் தனது கிராமத்துக்கு செல்ல சுமார் மூன்று நாட்களாகும். இப்போது குறைந்தது அவரால் விமானத்தில் பயணிக்க முடியும்.

No comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot