Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/17/2018

புரோஹித் Vs வித்யாசாகர் ராவ் இடையே என்ன பிரச்சனை.. ஒர் அதிர்ச்சி ரிப்போர்ட்

அருப்புகோட்டை , நான்கு மாணவிகளிடம் பேராசிரியை நடத்திய உரையாடல்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பேராசிரியை மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று அவரைக் கைது செய்தபோது, ' மீடியாக்கள் முன்னிலையில் அவர் பேசிவிடக் கூடாது' என்பதில் காவல்துறை அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். 


பேராசிரியை விவகாரத்தில் உயர்மட்டக் குழுவை அமைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம். அதேநேரம், நேற்று இரவு ராஜ்பவனில் இருந்து வெளியான அறிக்கை ஒன்றில், ஆர்.சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. ' ஒரேநேரத்தில் அமைக்கப்பட்ட இருவேறு விசாரணைக் குழுக்களின் மூலம், விவகாரத்தை மூடி மறைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன' எனக் கொதிக்கின்றனர் கல்வியாளர்கள். 

பேராசிரியை விவகாரம்குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், 'கல்லூரி மாணவியருக்கு வலைவிரிப்பது, ஆளுநரால் இந்தக் காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட நியமனங்கள் இதற்குப் பின் உள்ள சமூக விரோத கும்பல், இத்தகைய முறைகேடுகளில் உயர்கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளின் தொடர்பு உள்ளிட்டவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும். 

கல்வி நிலையங்களில் நடைபெறும் இத்தகைய கொடுமைகள்குறித்து  சென்னை உயர் நீதிமன்றம் தன் வழக்காக எடுத்துக்கொண்டு விசாரிக்க வேண்டும். மேலும், இவைகுறித்து  உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் நடைபெறக்கூடிய விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இத்தகைய விசாரணை முறையாக நடைபெற வேண்டுமெனில் சந்தேகத்துக்கு ஆளாகியுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும். விசாரணை முடியும் வரையில் இந்த ஆளுநரால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களையும் உயர்கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளையும் பணியிலிருந்து விலக்கிவைக்க வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது' எனக் குறிப்பிட்டிருந்தார். 

ஆளுநரை நேரடியாகக் குற்றம் சுமத்திய இந்த அறிக்கை, ராஜ்பவன் வட்டாரத்தை கலங்கடித்துள்ளது. 

ராஜ்பவன் மாளிகை வட்டார அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவுக்கும் பன்வாரிலால் புரோஹித்துக்கும் இடையில் உச்சகட்ட பனிப்போர் நடந்து வருகிறது. அதன்விளைவாகத்தான், ஆளுநர் மாளிகையை குறிவைத்து சில தகவல்கள் வெளியாகின்றன. 

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் மிகுந்த பதற்றத்துடன் விசாரணைக் குழுவை அமைக்க வேண்டிய அவசியம் ஆளுநர் மாளிகைக்கு இல்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை அமைத்த குழுவே போதுமானது. அதனைக் கண்காணிப்பதாக ஆளுநர் கூறியிருந்தால் சரியானதாக இருந்திருக்கும். மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதன் விவகாரம் வெளியில் கசிவதற்கு, ஆளுநர் மாளிகைக்குள் நடந்த உள்மோதல் ஒரு காரணமாக அமைந்தது. 

அதே பாணியில்தான், கிண்டி ராஜ்பவன் வட்டாரத்தில் இருந்தும் சில தகவல்கள் கிளம்புகின்றன. இதன்  பின்னணியில் பதவிப் போட்டி பிரதானமாக இருக்கின்றது" என விவரித்தவர், "தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக 2016 செப்டம்பர் 2-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார் மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவியேற்றார். அவர் பதவியேற்ற சில நாட்களிலேயே உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. வித்யாசாகர் ராவ் பதவியில் இருந்தவரையில், அரசியல்ரீதியாக எடுத்த முடிவுகள் விமர்சனத்தை எழுப்பின. ' தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் வேண்டும்' எனவும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. 

ஓராண்டுக்குப் பிறகே, 2017 அக்டோபர் மாதம் 6-ம் தேதி பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். அவர் பதவியில் அமர்ந்து சில வாரங்கள் மட்டுமே அமைதியாக இருந்தார். கடந்தாண்டு நவம்பரில் கோவை மாவட்ட அரசு நிர்வாகத்தை ஆய்வு செய்யக் கிளம்பினார். அரசியல்ரீதியாக இதற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

ஆளுநர் மாளிகையும் இதற்கு விளக்கம் கொடுத்தது. கடலூரில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் சர்ச்சையைக் கிளப்பின. அரசு அலுவலகத்தை ஆய்வு செய்வதோடு மட்டுமல்லாமல், முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் செலவினப் பட்டியலையும் ஆராயத் தொடங்கினார் புரோஹித். இங்குதான் பிரச்னை வெடிக்கத் தொடங்கியது. 

அதன் ஒருபகுதியாக, பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் இருந்த காலத்தில் ஹைதராபாத்துக்கு பிசினஸ் கிளாஸில் பயணம் செய்தார். இதற்கான பில்லை மகாராஷ்டிர ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்த புரோஹித், ' தனிப்பட்ட முறையில் நீங்கள் பயணம் செய்திருக்கிறீர்கள். இதனை அரசு கணக்கில் வரவு வைத்திருக்கக் கூடாது. இதற்கான பணத்தைச் செலுத்துங்கள்' எனக் கூறியதை வித்யாசாகர் ராவ் எதிர்பார்க்கவில்லை. 

இதனையடுத்து, ஆளுநர் மாளிகைக்கு 15 ஆண்டுகளாக மரச்சாமான்கள் மற்றும் தளவாட பொருட்களை விற்பனை செய்து வந்த அடையாறைச் சேர்ந்த முகமது யூனிஸ் என்பவர் வளைக்கப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளில் பத்து கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த மோசடியை பன்வாரிலால் வெளியில் கொண்டு வருவதற்குக் காரணமே, முன்னர் பொறுப்பில் இருந்தவரை சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். 

முகமது யூனிஸ் மீது மோசடி வழக்கு, போலியாக பில் தயாரித்தல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட முகமது யூனிஸை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கின் அனைத்து விவரங்களும் மத்திய உள்துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதனை இவ்வளவு விரைவாகச் செயல்படுத்தக் காரணம், கர்நாடக சட்டமன்றத் தேர்தல்தான். அங்கு தேர்தல் முடிந்ததும் மீண்டும் தமிழக ஆளுநராக வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார் வித்யாசாகர் ராவ். ' அ.தி.மு.க அரசு ஒருவேளை கலைக்கப்பட்டால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படலாம். 

அந்தநேரத்தில் தமிழக ஆளுநராக இருந்தால் சிறப்பாக இருக்கும்' என ராவ் நினைக்கிறார். இதற்கு முட்டுக்கட்டை போடும்விதமாக பன்வாரிலால் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அண்மையில் வெளியான செய்தி ஒன்றில், தென்மாநில ஆளுநர் ஒருவர் மீது பாலியல் புகார் என மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தகவல் கசிந்ததன் பின்னணியில் வித்யாசாகர் ராவ் இருப்பதாக நினைக்கிறார் புரோஹித். 

தற்போது ஆளுநர் மாளிகை குறித்து எதிர்க்கட்சிகளே அறிக்கை வெளியிடும் அளவுக்கு நிலைமை விபரீதம் ஆனதற்கும், ராவ்தான் காரணம் என உறுதியாக நம்புகிறார் புரோஹித். இதன் விளைவாகத்தான் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் அவசரம் அவசரமாக குழுவை அமைத்தார் ஆளுநர்" என்றார் விரிவாக.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"