Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/25/2018

சென்னை பயோகிராஃபி - சென்னை டே 2018


சென்னை, பல சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ள நகரம். இது, மதராசப்பட்டினம், மதராஸ், சென்னப்பட்டணம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் மெட்ராஸ் சிறிய கிராமமாகவே இருந்தது. தற்போது சென்னையின் நெரிசல் மிகுந்த பகுதிகளாக இருக்கும் எக்மோர், வேப்பேரி, திருவல்லிக்கேணி போன்றவை அக்கம்பக்க கிராமங்களாக இருந்திருக்கின்றன.

திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவான்மியூர், திருவொற்றியூர், பல்லாவரம், திருநீர்மலை, மாங்காடு முதலிய ஊர்கள், ஐரோப்பியர்கள் வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சிறப்பு பெற்று விளங்கின. திருவல்லிக்கேணி 1200 ஆண்டுகளுக்கு முன்பே திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்றிருந்தது. திருவல்லிக்கேணி கடற்கரை அருகே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த மீனவக்குப்பம் இருந்தது. இங்குள்ள மீனவர்கள் வீரம் மிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள்.

மயிலாப்பூரில் பெரிய துறைமுகம் இருந்ததாகத் தமிழ் இலக்கியங்களும், வெளி நாட்டவர் குறிப்புகளும் கூறுகின்றன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘தாலமி’ என்னும் புவியியல் ஆசிரியரால் வரையப்பட்ட படத்தில், இப்போதைய மயிலாப்பூரை ஒட்டி ‘மல்லியார்பா’ என்று துறைமுகம் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன், மயிலைக் காவலன் என்று அழைக்கப்படுகிறார்.

கி.பி. 13-ம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்த மார்க்கோ போலோ பரங்கிமலையில் உள்ள தேவாலயம் ‘நெஸ்டோரிய கிறிஸ்தவர்களால்’ பராமரிக்கப்படுகிறது என்று குறிப்பு எழுதியுள்ளார். `ரெஸ்டோரிய கிறிஸ்தவர்கள்’ பாரசீகத்தில் இருந்து (இன்றைய ஈராக், ஈரான்) வந்த கிறிஸ்தவர்கள். இவர்கள் பத்தாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள்.

ஐரோப்பா கண்டத்திலிருந்து முதன் முதலில் இந்தியாவுக்கு வந்தவர்கள் போர்ச்சுகீசியர்களே. இவர்கள், சென்னைப் பகுதிக்கு வந்து முதன் முதலில் தங்கள் வணிகத்தை ஆரம்பித்தபோது அவர்கள் குறிப்பிட்ட பெயர், ‘சாந்தோம் டி மெலியாபூர்’. இதன் பொருள் மயிலாப்பூரின் சாந்தோம் என்பதாகும். மயிலாப்பூர் மிகவும் பழமையான இந்திய நகரம். சாந்தோம் என்பது 17-ம் நூற்றாண்டில் மயிலாப்பூர் அருகில் இருந்த போர்த்துகீசிய குடியிருப்பு.

ஐரோப்பிய நாட்டவர்களுக்குள் யார் இந்தியாவில் முழுமையான அதிகாரம் செலுத்துவது என்ற போட்டி வந்தது. ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், டேனிஷ்கள் ஆகியோர் வரிசைகட்டி வந்தார்கள். அவர்களுக்குள் சண்டைகள் நடந்தன. வியாபாரம் செய்ய வந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியேற, இறுதிப் போட்டியில் பிரான்ஸும், இங்கிலாந்தும் மோதின. அதில் இங்கிலாந்து வெற்றிபெற்று நம்மை ஆளத் தொடங்கினார்கள். இந்தப் பின்னணியில்தான் சென்னையும் தோன்றி வளர்ந்தது.

சென்னை வரலாற்றில் முக்கியமான பெயர். இவர், ‘அர்மகாம்’ மற்றும் மசூலிப்பட்டினம் பகுதியின் ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதி. இவர்தான் அர்மகாம் மற்றும் மசூலிப்பட்டினம் தவிர நிறுவனத்துக்குப் பாதுகாப்பாக வேறு இடம் பார்க்க வேண்டும் என்று நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டார். இடத்தைத் தேர்வுசெய்யும் அதிகாரம் அவருக்கே வழங்கப்பட்டது.

பிரான்சிஸ்டே ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனிக்காகப் பார்த்த இடங்களுள் மெட்ராஸ் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அப்போது மெட்ராஸ் பகுதி, சந்திரகிரி மன்னனின் ஆளுகைக்குக் கீழ் இருந்தது. இந்த சந்திரகிரி இப்போது ஆந்திராவில் இருக்கிறது. சந்திரகிரி அரசரின் வரி வசூல் அதிகாரியாக பூந்தமல்லி நாயக்கர் வேங்கடகிரி இருந்தார். சென்னையை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் பூந்தமல்லி நாயக்கருடன் நடத்தப்பட்டன. பிறகு, சந்திரகிரி அரசரிடம் பேச்சு வார்த்தைகள் இறுதி செய்யப்பட்டன.

கி.பி.1639-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சந்திரகிரி அரசரிடம் இருந்து பிரான்சிஸ்டே மெட்ராஸ் பகுதியை விலைக்கு வாங்கினார். ஆங்கிலேயர் வியாபாரம் செய்து கொள்ளவும், கடைகளும், கோட்டையும் கட்டிக்கொள்ளவுமே இடம் விற்பனைசெய்யப்பட்டது. விற்பனை ஒப்பந்தம் செய்துகொண்ட ராஜமகால் அரண்மனை சந்திரகிரி ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கிறது.
சந்திரகிரி அரசரிடம் இருந்து நிலம் வாங்கிய ஓர் ஆண்டு கழித்து 1640-ம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்தக் கோட்டையை மையமாகக்கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்புகள் உருவாகின. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.

மெட்ராஸ் ஒரு மணற்பாங்கான கடற்கரை. மூங்கிலும், பனைமரங்களும் அதிகமாக இருந்தன. ஆரம்பத்தில், ஆங்கிலேயர்கள் வைக்கோல் நார் குடிசைகளைக் கட்டி வசிக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் இந்த குடியேற்றக் குடிசைகள் புனித ஜார்ஜ் கோட்டை என்றே அழைக்கப்பட்டன. பல ஆண்டுகளுக்குப் பிறகே வலிமையான கோட்டையும், குடியிருப்புகளும் முழுமைபெற்றன.

1746-ம் ஆண்டு, ஐரோப்பாவில் இங்கிலாந்தும், பிரான்ஸும் சண்டை போட்டுக்கொண்டிருந்தன. அதன் எதிரொலியாக பிரான்ஸுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே பெரும் கலகம் மூண்டது சென்னையில். இதுவே முதல் கர்நாடகப் போர் என்று குறிப்பிடப்படுகிறது.

முதல் கர்நாடகப் போரின் கடற்படைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல், ஆங்கிலேயர்கள் பிரான்ஸிடம் சரணடைந்துவிட்டார்கள். (பிரான்ஸ் கொஞ்சம் விழித்துக்கொண்டிருந்ததால், இந்தியாவின் தலையெழுத்தே மாறிப்போய் இருக்கும்) மெட்ராசிலும் பிரெஞ்சுக் கொடி பறந்தது. ஆனால், பின்னர் ஏற்பட்ட போர் சமாதான உடன் படிக்கைக்குப் பிறகு, மெட்ராஸ் பிரான்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள், குமாஸ்தாக்கள், மொழி பெயர்ப்பாளர்கள், சுமை கூலியாட்கள் போன்ற பணிகளுக்கு மண்ணின் மைந்தர்களையே வேலைக்கு அமர்த்தினார்கள். இதைத்தவிர, இங்கிலாந்தில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்ட பொருள்களை மொத்தமாக விற்கவும் வியாபாரிகளை அணுகினார். வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் மெட்ராஸில் குடியேற கம்பெனியின் ஏஜெண்டுகள் அதிக ஊக்கம் கொடுத்தனர். இதன் சாட்சியாக சென்னை நகரின் பல தெருக்களுக்கு வித்தியாசமான பெயர் இருப்பதைக் காண முடியும்.

சந்திரகிரி அரசரிடமிருந்து ‘பிரான்சிஸ் டே’ பெற்ற இடம், அளவில் சிறியதுதான். கூவம் நதி முகத்துவாரத்தில் இருந்து கடற்கரை வரையிலும், துறைமுகம், காசிமேடு மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வட்டமாகவே இருந்தது.

ஆங்கிலேயர்கள் உள்ளூர் மக்களைக் கவர்ந்திழுக்கும் சக்தியாக விளங்கினார்கள். அதனால், சென்னையில் மக்கள் தொகை அதிகரிக்கத் தொடங்கியது. சென்னை கையகப்படுத்தப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையின் மக்கள் தொகை 15,000. மக்கள் தொகை அதிகரித்துவிட்டதாகக் கருதி ஆங்கிலேயர் புனித ஜார்ஜ் கோட்டையை விரிவுபடுத்தினார்கள்.

1947-ம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணத்தின் தலைநகராக மெட்ராஸ் தேர்வு செய்யப்பட்டது. 1950-ம் ஆண்டில் 129 சதுர கிலோ மீட்டராக சென்னை விரிவடைந்தது. 1969-ம் ஆண்டு, சென்னை மாகாணம் என்ற பெயர் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முன்னதாக, இதற்கான தீர்மானம் அப்போதைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களால் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

1996-ம் ஆண்டில் மெட்ராஸ் மாநகரம், சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2011-ம் ஆண்டில் 9 நகரங்கள், 8 பேரூராட்சிகள் 25 பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டு, 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பெருநகரமாக சென்னை விரிவடைந்தது.

2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 67 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி, 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3 வருவாய் கோட்டங்களையும், 16 வட்டங்களையும், 122 வருவாய் கிராமங்களையும் கொண்டதாகச் சென்னையின் பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன.

தகவல்கள் இணையத்திலிருந்து தொகுக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"